ஸ்ரீ முஷ்ணம் பூவராஹப் பெருமாள் கோயில். கடலூர் ஜில்லாவில் உள்ளது.

இது 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று அன்று. ஆனால் வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் மிக முக்யமான மற்றும் எல்லோராலும் மிகுந்த பக்தியுடனும் ஆர்ஜவத்துடனும் வழிபடப்படும் ஒரு கோவில்.

மாசி மகத்தின் போது பெருமாள் அருகில் உள்ள அனைத்து க்ராமங்களுக்கும் சென்று பக்தர்களுக்கு தர்சனமளிப்பார். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கிள்ளை என்ற ஊருக்கருகில் உள்ள க்ராமமான தைக்கல்லில் பெருமாள் கடலாடுவது வழக்கம்.

பூவராஹப்பெருமாள் மதங்களைக் கடந்து இவ்விடங்களில் அனைவராலும் வழிபடப்பெறுகிறார்.

தைக்கல்லில் அனைத்து இடங்களிலும் செல்லும் பெருமாள் அங்குள்ள முஸல்மான் சமூஹத்தினர் படைக்கும் படையல்களையும் ஏற்றுக்கொள்கிறார் என்பது சிறப்பு.

அங்குள்ள மசூதியின் முன்னமும் பெருமாள் செல்லுதலும் அதன் தலைமக் காஜி பெருமாளுக்கு மாலைகள் மற்றும் பக்ஷணங்கள் சமர்ப்பித்தலும் இன்று வரை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

காஜி குரான்-ஏ-ஷெரீஃப் ஓதித் தன்முறைப்படிப் பெருமாளுக்குத் தன் மரியாதையைச் செலுத்துகிறார்.இரவில் புஷ்பப் பல்லக்கில் வாண வேடிக்கைகளுடன் பெருமாள் இக்ராமங்களில் சேவை சாதிக்கிறார்.

அந்தப் பகுதியை ஆட்சி செய்த நவாபுக்கு தீர இயலா வ்யாதி வந்து துன்புற்றபோது அவரிடம் இரக்கம் கொண்ட ஒரு மாத்வ ப்ராம்மணர் பெருமாள் கோவிலில் தான் பெற்ற தீர்த்தம் மற்றும் துளசீதளத்தை அவருக்குக் கொடுக்கிறார். அதை மரியாதையுடன் ஏற்று உட்கொண்ட நவாப் சுகம் பெறுகிறார். அந்த நன்றிக்கடனுக்காக பல ஏக்கர் நிலத்தைஅந்த மாத்வருக்கு (வெங்கட ராயர்?) நவாப் தான சாசனம் செய்துள்ளார்.

இன்று வரை மாத்வர்களிடம் அந்த நிலபுலன் கள் உள்ளன.
மற்ற ஹிந்து தெய்வங்கள் அங்குள்ள முஸல்மான் களால் கொண்டாடப்படுவதில்லை.

பின்னிட்டும் ஹிந்து முஸல்மான் இணக்கம் தமிழகத்தில் தளைப்பதற்கு இதை ஒரு உதாஹரணமாகச் சொல்லலாம். இது நான் சமீபத்தில் கேட்ட வ்ருத்தாந்தம். மேலும் இணையத்திலும் வாசித்து,சொல்லப் பட வேண்டியவிஷயம் என்பதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

--
R.Vijayaraghavan