Tuesday, December 20, 2011

An appeal for Temple renovation

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
 
அடியேன் தாஸஸ்ய விக்ஞாபனம்.

சோழ நாடு சோறுடைத்து என்பது ஆன்றோர் வாக்கு அதே போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களும் நாயன்மார் பாடிய சிவஸ்தலங்களும் பல புராண ஸ்தலங்களும் நிறைந்துள்ளன. ஆனால் கலியின் விசேஷம் பல அக்ரஹாரங்கள் க்ஷீணமடைந்து கோவில்கள் பொலிவிழந்து போயின. எம்பெருமான் கருணையினால் பலகோயில்கள் அழிவிலிருந்து மீண்டாலும் இன்னும் பல கோயில்கள் புனருத்தாரணத்திற்கு காத்திருக்கின்றன. பல பேர் வெளிதேசவாசிகளாயும் நம் தேசத்திலேயே பல நகரங்களுக்கு குடிபெயர்ந்ததும் கோயில்களின் வருந்தத் தக்க நிலைக்கு ஒரு காரணம். அப்படிப்பட்ட ஒரு அக்ரஹாரம் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் என்கிற க்ராமம். இது அந்நாளில் சாமவேதம் ஓதும் அந்தணர்களால் நிரம்பப் பெற்றிருந்தது என்கின்றனர் விவரமறிந்த பெரியோர். அந்த க்ராமத்தில் ஒரு அற்புதமான ஸ்ரீ கோதண்டராமன் சன்னிதியுள்ளது. சக்ரவர்த்தி திருமகன் தம்பி லக்ஷ்மணனோடும் பிராட்டியோடும் அருகில் சிறிய திருவடியோடு(அஞ்சலி ஹஸ்தனாய்) காட்சியளிக்கிறான். மேலும் வரதராஜப் பெருமாள் சமேத ஸ்ரீபெருந்தேவித் தாயாரின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். ஆனால் கோயில் இருக்கும் நிலை நம்மைக் கண்ணீர் விடவைக்கும். திருப்பணியாகி அரை நூற்றாண்டு ஆகிறது. கோயிலின் கர்பக்ரஹ விமானம் மிகவும் அழகியது. இப்படிப்பட்ட ஒரு சன்னிதியை அழியவிடக்கூடாது என்கிற சங்கல்பத்தோடு ஸ்ரீராம கைங்கர்ய சபா என்கிற அமைப்பு புனருத்தாரணத் திருப்பணியைத் தொடங்கியுள்ளனர். இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டபலர் நம் தேசத்திலேயோ அல்லது வெளிநாடுகளிலோ நல்ல உத்யோகத்தில் இருக்கலாம். ஊர் கூடி தேர் இழுப்பது என்பது போல் எல்லோரும் இணைந்து இத்திருப்பணியில் ஈடுபட்டு வெகு விரைவில் இந்தச்சன்னிதி மஹாசம்ப்ரோக்ஷணம் காண உதவுவது என்பது ஆயிரம் அஸ்வமேத யாக பலனைத்தரும் என்பதில் சந்தேகமில்லை.ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் ஸ்ரீகார்யமாய் இருந்த ஸ்ரீமான் சித்ரகூடம் விஜயராகவாச்சார்யர் ஸ்வாமி இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் தெரிகிறது..மேலும் விவரங்களுக்கு ஸ்ரீமான் வி. ரமேஷ் (கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்) 9443748915 அவர்களைத் தொடர்பு கொள்ளப் ப்ரார்த்திக்கிறேன்.



சித்ரகூடம் ரங்கநாதன்.

No comments:

Post a Comment